இந்த ஆன்மீக பதிவில் (ஓருரு வாயினை : திருவெழுகூற்றிருக்கை) – Oruruvayinai Thevaram Thiruvelukutrrirukai பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஓருரு வாயினை : திருவெழுகூற்றிருக்கை ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

திருமுறை : முதல் திருமுறை

பண் : வியாழக்குறிஞ்சி

நாடு : சோழநாடு காவிரி வடகரை

தலம் : சீர்காழி – பல்பெயர்ப்பத்து

சிறப்பு: திருவெழுகூற்றிருக்கை

ஓருரு வாயினை மானாங் காரத்

தீரியல் பாயொரு விண்முதல் பூதலம்

ஒன்றிய விருசுட ரும்பர்கள் பிறவும்

படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை

இருவரோ டொருவ னாகி நின்றனை 5

ஓரா னீழ லொண்கழ லிரண்டும்

முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி

காட்டினை நாட்ட மூன்றாகக் கோட்டினை

இருநதி யரவமோ டொருமதி சூடினை

ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம் 10

நாற்கான் மான்மறி யைந்தலை யரவம்

ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத்

திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை

ஒருதனு விருகால் வளைய வாங்கி

முப்புரத் தோடு நானில மஞ்சக் 15

கொன்று தலத்துற வவுணரை யறுத்தனை

ஐம்புல னாலா மந்தக் கரணம்

முக்குண மிருவளி யொருங்கிய வானோர்

ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ

டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து 20

நான்மறை யோதி யைவகை வேள்வி

அமைத்தா றங்க முதலெழுத் தோதி

வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்

பிரமபுரம் பேணினை

அறுபத முரலும் வேணுபுரம் விரும்பினை 25

இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை

பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை

பாணிமூ வுலகும் புதையமேன் மிதந்த

தோணிபுரத் துறைந்தனை தொலையா விருநிதி

வாய்ந்த பூந்தரா யேய்ந்தனை 30

வரபுர மொன்றுணர் சிரபுரத் துறைந்தனை

ஒருமலை யெடுத்த விருதிற லரக்கன்

விறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை

முந்நீர்த் துயின்றோ னான்முக னறியாப்

பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை 35

ஐயுறு மமணரு மறுவகைத் தேரரும்

ஊழியு முணராக் காழி யமர்ந்தனை

எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை

ஆறு பதமு மைந்தமர் கல்வியும்

மறைமுத னான்கும் 40

மூன்று காலமுந் தோன்ற நின்றனை

இருமையி னொருமையு மொருமையின் பெருமையும்

மறுவிலா மறையோர்

கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை

கழுமல முதுபதிக் கவுணிய னறியும் 45

அனைய தன்மையை யாதலி னின்னை

நினைய வல்லவ ரில்லைநீ ணிலத்தே.

============

ஓருரு வாயினை திருவெழுகூற்றிருக்கை பொருள் | Oruruvayinai Thevaram Thiruvelukutrrirukai Meaning

சொரூப நிலையில் விளங்கும் பரசிவம் ஆகிய நீ உனது இச்சையால் ஐந்தொழில்களை நிகழ்த்த வேண்டி எடுத்துக் கொண்ட ஓருருவமாகிய திருமேனியை உடையை ஐய‌னை, உன் சக்தியைக் கொண்டு அவ் ஐந்தொழில்களை நடத்தும் திருவுளக்குறிப்போடு சத்தி சிவம் என்னும் இரு உருவாயினை, விண் முதலிய பூதங்களையும் சந்திர சூரியர்களையும் தேவர்கள் மக்கள் முதலியோரையும் படைத்துக் காத்து அழிக்க அயன் அரி அரன் என்னும் மும்மூர்த்திகள் ஆயினை, பிரமன் திருமால் ஆகிய இருவரையும் வலத்திலும் இடத்திலும் அடக்கி ஏக மூர்த்தியாக நின்றாய், ஒப்பற்ற கல்லால மரநிழலில் உனது இரண்டு திருவடிகளை முப்பொழுதும் ஏத்திய சனகர், சனந்தனர் முதலிய நால்வர்க்கு ஒளி நெறியைக் காட்டினாய், சூரியன் சந்திரன் அக்கினி ஆகியோரை மூன்று கண்களாகக் கொண்டு உலகை விழுங்கிய பேரிருளை ஓட்டினாய், கங்கையையும் பாம்பையும் பிறைமதியையும் முடிமிசைச் சூடினாய்,

ஒரு தாளையும் ஈருகின்ற கூர்மையையும் முத்தலைகளையும் உடைய சூலத்தையும் நான்கு கால்களையும் உடைய மான் கன்று, ஐந்து தலை அரவம் ஆகியவற்றையும் ஏந்தினாய்,

சினந்து வந்த, தொங்கும் வாயையும் இரு கோடுகளையும் கொண்ட ஒப்பற்ற யானையை அதன் வலி குன்றுமாறு அழித்து அதன் தோலை உரித்துப் போர்த்தாய்,

ஒப்பற்ற வில்லின் இருதலையும் வளையுமாறு செய்து கணை தொடுத்து முப்புரத்தசுரர்களை இவ்வுலகம் அஞ்சுமாறு கொன்று தரையில் அவர்கள் இறந்து கிடக்குமாறு அழித்தாய்.

ஐம்புலன்கள் நான்கு அந்தக் கரணங்கள், முக்குணங்கள் இரு வாயுக்கள் ஆகியவற்றை ஒடுக்கியவர்களாய தேவர்கள் ஏத்த நின்றாய்,

ஒருமித்த மனத்தோடு, இரு பிறப்பினையும் உணர்ந்து முச்சந்திகளிலும் செய்யத்தக்க கடன்களை ஆற்றி நான்மறைகளை ஓதி ஐவகை வேள்விகளையும் செய்து ஆறு அங்கங்களையும் ஓதி, பிரணவத்தை உச்சரித்து தேவர்களுக்கு அவி கொடுத்து மழை பெய்விக்கும் அந்தணர் வாழும் பிரமபுரத்தை விரும்பினாய்,

ஆறுகால்களை உடைய வண்டுகள் இசைபாடும் பொழில் சூழ்ந்த வேணுபுரத்தை விரும்பினாய்,

தேவர்கள் புகலிடம் என்று கருதி வாழ்ந்த புகலியை விரும்பினாய். நீர் மிகுந்த கடல் சூழ்ந்த வெங்குரு என்னும் தலத்தை விரும்பினாய்.

மூவுலகும் நீரில் அழுந்தவும் தான் அழுந்தாது மிதந்த தோணிபுரத்தில் தங்கினாய்.

வழங்கக் குறையாத செல்வவளம் மிக்க பூந்தராயில் எழுந்தருளினாய்.

வரந்தருவதான சிரபுரத்தில் உறைந்தாய்,

ஒப்பற்ற கயிலை மலையைப் பெயர்த்த பெருந்திறல் படைத்த இராவணனின் வலிமையை அழித்தாய்.

புறவம் என்னும் தலத்தை விரும்பினாய்,

கடலிடைத் துயிலும் திருமால் நான்முகன் ஆகியோர் அறிய முடியாத பண்பினை உடையாய்.

சண்பையை விரும்பினாய்.

ஐயுறும் சமணரும் அறுவகையான பிரிவுகளை உடையபுத்தரும் ஊழிக்காலம் வரை உணராது வாழ்நாளைப் பாழ் போக்கக் காழிப்பதியில் எழுந்தருளியுள்ளாய்.

வேள்வி செய்வோனாகிய ஏழிசையோன் வழிபட்ட கொச்சை வயத்தை விரும்பி வாழ்கின்றாய்,

ஆறு பதங்கள், ஐந்து வகைக் கல்வி, நால் வேதம், மூன்று, காலம், ஆகியன தோன்ற நிற்கும் மூர்த்தியாயினாய்,

சத்தி சிவம் ஆகிய இரண்டும் ஓருருவமாய் விளங்கும் தன்மையையும் இவ்விரண்டு நிலையில் சிவமாய் ஒன்றாய் இலங்கும் தன்மையையும் உணர்ந்த குற்றமற்ற அந்தணாளர் வாழும் கழுமலம் என்னும் பழம்பதியில் தோன்றிய கவுணியன்குடித் தோன்றலாகிய ஞானசம்பந்தன் கட்டுரையை விரும்பிப் பிரமன் மண்டையோட்டில் உண்ணும் பெருமானே அறிவான். அத்தன்மையை உடைய நின்னை உள்ளவாறு அறிவார், நீண்ட இவ்வுலகிடை இனிப்பிறத்தல் இலர்.

குருவருள்: ஞானசம்பந்தர் அருளிய சித்திரக் கவிகளுள் ஒன்றாகிய திருவெழுகூற்றிருக்கை ஒன்றை மட்டுமே பாராயணம் புரிவோர்,அவர் அருளிய தேவாரத் திருப்பதிகங்கள் அனைத்தையும் ஓதிய பயனைப் பெறுவர் என்பது மரபு.

சிவபாத இருதயர், திருஞானசம்பந்தர் ஓதிவரும் திருப்பதிகங்களை நாள்தோறும் பாராயணம் செய்வதை நியமமாகக் கொண்டிருந்தார். பதிகம் பெருகப் பெருகப் பாராயணம் செய்வதில் தம் தந்தையார் இடர்ப்படுதலைக் கண்ட திருஞானசம்பந்தர் இத்திருவெழுகூற்றிருக்கையை அருளி இதனை ஓதி வந்தாலே அனைத்துத் திருப்பதிகங்களையும் ஓதிய பயனைப் பெறலாம் எனக் கூறினார் என்பர்.

(oruruvayinai thevaram thiruvelukutrrirukai) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, சிவன் பாடல்கள். You can also save this post ஓருரு வாயினை : திருவெழுகூற்றிருக்கை or bookmark it. Share it with your friends…

Leave a Comment