இந்த ஆன்மீக பதிவில் (ஸ்ரீ வாராஹி மாலை பாடல் வரிகள்) – Sri Varahi malai lyrics Tamil பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடல் வரிகளை படித்து இறைவனின் அருளை பெறுவோம்… ஸ்ரீ வாராஹி மாலை பாடல் வரிகள் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் எங்களுக்கு கமெண்ட் வழியாக தெரியப்படுத்தவும்..
ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள பாடல்கள் யாவும் மிகுந்த மந்திர சக்தி உடையவை. மந்திரங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவை. சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கத் தெரியாதவர்களும், மற்றும் யாவரும் ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள 32 பாடல்களையும் தினம் படித்து வரலாம்.அல்லது அதில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஒரு குறிப்பிட்ட பலனைத்தரும் அதில் உங்கள் தேவைக்கான பாடலை மட்டும் தேர்ந்தெடுத்து தினமும் படித்து வர தேவை நிச்சயம் நிறைவேறும்.
ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு மந்திரம். குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள் சில கீழே கொடுத்துள்ளோம். அம்பிகை படத்தை வைத்து அல்லது திருவிளக்கில் ஒளியில் ஸ்ரீ வாராஹியை நினைத்து கொண்டு வழிபடுங்கள்.
============
குறிப்பிட்ட காரியங்களுக்கான ஸ்ரீ வாராஹி மந்திரங்கள்
:-
1.வாக்கு வன்மை,சபைகளில் பேர் பெற,கல்விஞானம் பெற:-
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் நமோ வாராஹி|
மம வாக்மே ப்ரவேஸ்ய வாக்பலிதாய||
2.எதிரிகளால் தீமை ஏற்படாதிருக்க :-
ஓம் சத்ருசம்ஹாரி| சங்கடஹரணி| மம மாத்ரே |ஹ்ரீம் தும் வம் சர்வாரிஷ்டம் நிவாரய|சர்வ சத்ரூம் நாசய நாசய ||
3.செல்வவளம் பெருக:-
க்லீம் வாராஹமுகி |ஹ்ரீம் சித்திஸ்வரூபிணி |ஸ்ரீம் தனவசங்கரி தனம் வர்ஷய ஸ்வாஹா||
4.சர்வ சித்திகளும் செல்வமும் பெற :-
ஸ்ரீம் பஞ்சமி சர்வசித்திமாதா| மம கிரகம் மே தனசம்ருத்திம் தேஹி தேஹி நம||
5.எல்லா வகையான பயமும் நீங்க :-
ஓம் ஹ்ரீம் பயங்கரி| அதிபயங்கரி|ஆச்சர்ய பயங்கரி| சர்வஜன பயங்கரி| சர்வ பூத பிரேத பிசாச பயங்கரி |சர்வ பயம் நிவாரய சாந்திர்ப்பவது மே சதா||
6.வறுமை நீங்க :-
ஓம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம் நம: மம மாத்ரே வாராஹி தேவி மம தாரித்ரியம் த்வம்சய த்வம்சய||
ஸ்ரீ மகா வாராஹியின் பன்னிரு திருநாமங்கள்:-
மேற்கண்ட மந்திரத்தை ஜெபிப்பவர்கள்,ஜெபிக்க இயலாதவர்கள் யாவரும் கீழ்க்காணும் ஸ்ரீ மகாவாராஹியின் 12 நாமங்களை காலையில் குளித்து முடித்ததும் சொல்லி வணங்க அவள் அருள் துணை நிற்கும்.
1.பஞ்சமி
2.தண்டநாதா
3.சங்கேதா
4.சமயேச்வரி
5.சமயசங்கேதா
6.வாராஹி
7.போத்ரிணி
8.சிவா
9.வார்த்தாளி
10.மகாசேனா
11.ஆக்ஞா சக்ரேச்வரி
12.அரிக்னீ
ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள பாடல்கள் யாவும் மிகுந்த மந்திர சக்தி உடையவை. சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கத் தெரியாதவர்களும், மற்றும் யாவரும் ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள 32 பாடல்களையும் தினம் படித்து வரலாம்.அல்லது அதில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஒரு குறிப்பிட்ட பலனைத்தரும் அதில் உங்கள் தேவைக்கான பாடலை மட்டும் தேர்ந்தெடுத்து தினமும் படித்து வர தேவை நிச்சயம் நிறைவேறும்.
காரியசித்தி,பயம் நீங்க மற்றும் பல காரியங்களுக்கும் சிறப்பு பூஜை,யந்திர,மந்திர,ஹோமம், ரக்ஷை, உள்ளது .ஸ்ரீ அச்வாரூடா, ஸ்ரீ அபராஜிதா மந்திரங்கள், அரசாங்களில் வெற்றி தருவதுடன், எத்தகைய வழக்கு, எதிர்ப்புகளையும் தீர்க்கும் .
கருணாசாகரி ஓம் ஸ்ரீ மகாவாராஹி பத்மபாதம் நமோஸ்துதே||
வாராஹி வாராஹி வாராஹி பாஹிமாம்||
வார்த்தாளி வார்த்தாளி வார்த்தாளி ரக்ஷமாம் ||
============
ஸ்ரீ வாராஹி மாலை | வாராஹி பாமாலை
1. வசீகரணம் (தியானம்)
இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும்
குரு மணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம்
திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி
மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே.
2. காட்சி (யந்த்ர ஆவாஹனம்)
தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து
ஈராறிதழ்இட்டு ரீங்காரம் உள்ளிட் டதுநடுவே
ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடிபணிந்தால்
வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.
3. பகை தடுப்பு (பிரதாபம்)
மெய்ச்சிறத்தாற்பணியார் மனம் காயம் மிகவெகுண்டு
கைச்சிரத் தேந்திப் புலால்நிணம் நாறக் கடித்துதறி
வச்சிரத் தந்த முகப்பணியாற் குத்தி வாய்கடித்துப்
பச்சிரத்தம்குடிப்பாளே வாராஹி பகைஞரையே.
4. மயக்கு (தண்டினி தியானம்)
படிக்கும் பெரும்புகழ்ப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
அடிக்கும் இரும்புத் தடிகொண்டு பேய்கள் அவர்குருதி
குடிக்கும் குடர்கொண்டு தோள்மாலை இட்டுக் குலாவிமன்றில்
நடிக்கும் வாராஹி பதினா லுலகம் நடுங்கிடவே.
5. வெற்றி ஈர்ப்பு (சத்ரு ஸம்ஹாரம்)
நடுங்கா வகைஅன்பர் நெஞ்சினிற் புக்கவர் நண்ணலரைக்
கொடும்காளி உண்ணக் கொடுக்கும் குருதிகள் கொப்பளித் திட்
டிடும்பாரக் கொங்கையின் மீதே இரத்தத் திலகம்இடும்
தொடும்கார் மனோன்மணி வாராஹிநீலி தொழில் இதுவே.
6. உச்சாடணம் (ரோகஹரம்)
வேய்க்குலம் அன்னதிண்தோளாள் வாராஹிதன் மெய்யன்பரை
நோய்க்குலம் என்ன இடும்பு செய்வார்தலை நொய்தழித்துப்
பேய்க்குலம் உண்ணப் பலிகொண்டு போட்டுப் பிணக்குடரை
நாய்க்குலம் கௌவக் கொடுப்பாள் வாராஹிஎன் நாரணியே.
7. எதிர்ப்புக் கட்டு (சத்ருஹரம்)
நாசப் படுவர் நடுங்கப்படுவர் நமன்கயிற்றால்
வீசப் படுவர் வினையும் படுவர்இம் மேதினியோர்
ஏசப் படுவர் இழுக்கும் படுவர்என் ஏழைநெஞ்சே
வாசப் புதுமலர்த் தேனாள் வாராஹியை வாழ்த்திலரே.
8. பெரு வச்யம் (திரிகாலஞானம்)
வாலை புவனை திரிபுரை மூன்றும்இவ் வையகத்திற்
காலையும் மாலையும் உச்சியும் ஆகஎக் காலத்துமே
ஆலயம் எய்தி வாராஹிதன் பாதத்தை அன்பில் உன்னி
மாலயன் தேவர் முதலான பேர்களும் வாழ்த்துவரே.
9. பகை முடிப்பு (வித்வேஷணம்)
வருத்திப் பகைத்தீர் என்னோடறியாமல்முன் வானவர்க்காச்
சிரித்துப் புரம்எரித்தோன் வாம பாகத்துத் தேவி எங்கள்
கருத்திற் பயிலும் வாராஹிஎன் பஞ்சமி கண்சிவந்தாற்
பருத்திப் பொதிக்கிட்ட தீப்பொறி காணும் பகைத்தவர்க்கே.
10. வாக்கு வெற்றி (சத்ரு மாரணம்)
பாப்பட்ட செந்தமிழ்ப் பாவாணர் நின்மலர்ப் பாதம் தன்னிற்
பூப்பட்டதுவும் பொறிபட்டதோ? நின்னை யேபுகழ்ந்து
கூப்பிட்ட துன்செவி கேட்கிலையோ? அண்ட கோளமட்டும்
தீப்பட்ட தோ? பட்டதோ நிந்தை யாளர்தெரு எங்குமே.
11. தேவி வருகை (பூதபந்தனம்)
எங்கும் எரியக் கிரிகள் பொடிபட எம்பகைஞர்
அங்கம் பிளந்திட விண்மண் கிழிந்திட ஆர்த்தெழுந்து
பொங்கும் கடல்கள் சுவறிடச் சூலத்தைப் போகவிட்டுச்
சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே.
12. ஆத்மபூஜை (மஹாமாரி பஜனம்)
சக்தி கவுரி மஹமாயி ஆயிஎன் சத்துருவைக்
குத்தி இரணக் குடரைப் பிடுங்கிக் குலாவிநின்றே
இத்திசை எங்கும் நடுங்கக் கிரிகள் இடிபடவே
நித்தம் நடித்து வருவாள் வாராஹிஎன் நெஞ்சகத்தே
13. தேவிதாபனம் (பில்லி மாரணம்)
நெஞ்சகம் தன்னில் நிறைந்திருக் கின்றவன் நிர்க்குணத்தி
நஞ்சணி கண்டத்தி நாரா யணிதனை நம்புதற்கு
வஞ்சனை பண்ணி மதியாத பேரைவாழ் நாளை உண்ணக்
கொஞ்சி நடந்து வருவாள் வாராஹி குலதெய்வமே.
14. மந்திரபூஜை (முனிமாரணம்)
மதுமாமிஸம்தனைத் தின்பாள் இவள்என்று மாமறையோர்
அதுவே உதாஸினம் செய்திடுவார் அந்த அற்பர்கள்தம்
கதிர்வாய் அடைத்திட உள்ளம் கலங்கக் கடித்தடித்து
விதிர் வாளில் வெட்டி எறிவாள் வாராஹிஎன் மெய்த் தெய்வமே.
15. வாராஹி அமர்தல் (மூர்த்தி தியானம்)
ஐயும் கிலியும் எனத்தொண்டர் போற்ற அரியபச்சை
மெய்யும் கருணை வழிந்தோடுகின்ற விழியு(ம்) மலர்க்
கையும் பிரம்பும் கபாலமும் சூலமும் கண்எதிரே
வையம் துதிக்க வருவாள் வாராஹி மலர்க்கொடியே
16. வரம் பொழிதல் (எதிரி மாரணம்
)
தாளும் மனமும் தலையும் குலையத் தரியலர்கள்
மாளும் படிக்கு வரம்தருவாய்: உன்னை வாழ்த்தும் அன்பர்
கோளும் பகையும் குறியார்கள் வெற்றி குறித்த சங்கும்
வாளும் கடகமும் சூலமும் ஏந்தி வரும் துணையே!
17. வாழ்த்துதல் (உலக மாரணம்)
வருந்துணை என்று வாராஹிஎன்றன்னையை வாழ்த்திநிதம்
பொருந்தும் தகைமையைப் பூணா தவர் புலால்உடலைப்
பருந்தும் கழுகும்வெம் பூதமும் வெய்ய பிசாசுகளும்
விருந்துண்ணப் பட்டுக் கிடப்பர்கண்டீர் உடல் வேறுபட்டே.
18. நன்னீர் வழங்கல் (ஏவல் பந்தனம்)
வேறாக்கும் நெஞ்சும் வினையும்வெவ்வேறு வெகுண்டுடலம்
கூறாக்கும் நெஞ்சத்திற் செந்நிறம் ஆன குருதிபொங்கச்
சேறாக்கும் குங்குமக் கொங்கையிற் பூசும் திலகம் இடும்
மாறாக்கும் நேமிப் படையாள் தலைவணங்காதவர்க்கே.
19. புனித நீர் அருந்துதல் (துஷ்ட பந்தனம்)
பாடகச் சீறடிப் பஞ்சமி அன்பர் பகைஞர்தமை
ஓடவிட் டேகை உலக்கைகொண் டெற்றி உதிரம் எல்லாம்
கோடகத் திட்டு வடித்தெடுத் தூற்றிக் குடிக்கும் எங்கள்
ஆடகக் கும்ப இணைக்கொங்கையாள்எங்கள் அம்பிகையே.
20. மலர் வழிபாடு (கர்ம வாஸன நாசனம்)
தாமக் குழலும் குழையும் பொன் ஓலையும் தாமரைப்பூஞ்
சேமக் கழலும் துதிக்கவந் தோர்க்கு ஜெகம்அதனில்
வாமக் கரள களத்தம்மை ஆதி வாராஹிவந்து
தீமைப் பவத்தைக் கெடுத்தாண்டு கொள்வாள் சிவசக்தியே.
21. தேவி சன்னிதானம் (கர்ம மூலபந்தனம்)
ஆராகிலும் நமக்கேவினை செய்யின் அவர் உடலும்
கூராகும் வாளுக் கிரைஇடுவாள்கொன்றை வேணிஅரன்
சீரார் மகுடத் தடிஇணை சேர்க்கும் திரிபுரையாள்
வாராஹி வந்து குடிஇருந்தாள்என்னை வாழ்விக்கவே.
22. தேவி துதி மாலை (ஜன்ம துக்க நாசனம்)
தரிப்பாள் கலப்பை என்அம்மை வாராஹிஎன் சத்துருவைப்
பொரிப்பாள் பொறிஎழச் செந்தீயில் இட்டு பொரிந் ததலை
நெரிப்பாள் தலைமண்டை மூளையைத் தின்றுபின் நெட்டுடலை
உரிப்பாள் படுக்க விரிப்பாள்சுக்காக உலர்த்துவளே
23. புகழ்சொற்பாமாலை (மௌனானந்த யோகம்)
ஊரா கிலும்உடன் நாடா கிலும்அவர்க் குற்றவரோடு
யாரா கிலும்நமக் காற்றுவரோ? அடல்ஆழி உண்டு
காரார் கருத்த உலக்கையும் உண்டு கலப்பை உண்டு
வாராஹி என்னும்மெய்ச் சண்டப் ப்ரசண்ட வடிவிஉண்டே.
24. படைக்கள வாழ்த்து (பதஞான யோகம்)
உலக்கை கலப்பை ஒளிவிடு வாள்கட காழிசங்கம்
வலக்கை இடக்கையில் வைத்த வாராஹிஎன் மாற்றலர்கள்
இலக்கம் இல்லாத எழிற்பெரும் சேனை எதிர்வரினும்
விலக்கவல்லாள் ஒரு மெல்லிதன் பாதம் விரும்புகவே.
25. பதமலர் வாழ்த்து (பிரதிபந்த நாசன யோகம்)
தஞ்சம் உன் பாதம் சரணா கதிஎன்று சார்ந்தவர்மேல்
வஞ்சனை பில்லி கொடிதேவல் சூனியம் வைத்தவரை
நெஞ்சம் பிளந்து நிணக்குடல் வாங்கி நெருப்பினிலிட்(டு)
அஞ்சக் கரங்கொண் டறுப்பாள் திரிபுரை ஆனந்தியே.
26. படைநேமி வாழ்த்து (சிந்தனானந்த யோகம்)
அலைபட்டு நெஞ்சம் அலைந்துயிர் சோர அலகைக் கையால்
கொலைபட் டுடலம் கழுகுகள் சூழக் குருதி பொங்கித்
தலைகெட்டவயவம் வேறாய்ப் பதைப்புற்றுச் சாவர்கண்டீர்
நிலைபெற்ற நேமிப் படையாள் தனைநினை யாதவரே.
27. அடியார் வாழ்த்து (அர்ச்சனானந்த யோகம்)
சிந்தை தெளிந்துனை வாழ்த்திப் பணிந்து தினம்துதித்தே
அந்தி பகல்உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்
நிந்தனை பண்ணி மதியாத உலுத்தர் நிணம் அருந்திப்
புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹிநற் பொற்கொடியே.
28. திருப்படை வந்தனம் (அம்ருதானந்த யோகம்)
பொருப்புக்கு மாறுசெய் ஆழியும் தோடும் பொருப்பைவென்ற
மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் என(து)
இருப்புக் கடிய மனதிற் குடிகொண்டு எதிர்த்தவரை
நெருப்புக் குவால்எனக் கொல்வாய் வாராஹிஎன் நிர்க்குணியே.
29. பதமலர் வந்தனம் (கைவல்யானந்த யோகம்)
தேறிட்ட நின்மலர்ப் பாதார விந்தத்தைச் சிந்தை செய்து
நீறிட் டவர்க்கு வினைவரு மோ? நின் அடியவர்பால்
மாறிட் டவர்தமை வாள்ஆயுதம் கொண்டு வாட்டிஇரு
கூறிட் டெறிய வருவாய் வாராஹி குலதெய்வமே.
30. சித்தி வந்தனம் (ஆனந்த யோகம்)
நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமான்
அரிஅயன் போற்றும் அபிராமி தன்அடி யார்க்கு முன்னே
ஸரியாக நின்று தருக்கம்செய் மூடர்தலையைவெட்டி
எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும்தெய்வமே.
31. நவகோண வந்தனம் (நித்யானந்த யோகம்)
வீற்றிருப்பாள்நவ கோணத்திலேநம்மை வேண்டும் என்று
காத்திருப்பாள்கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம்
பார்த்திருப்பாள் அல்லள் எங்கேஎன்றங்குச பாசம் கையில்
கோத்திருப்பாள் இவளேஎன்னை ஆளும் குலதெய்வமே.
32. நிறைமங்கலம் (சிவஞான யோகம்)
சிவஞான போதகி செங்கைக் கபாலி திகம்பரிநல்
தவம்ஆரும் மெய்யன்பர்க் கேஇடர் சூழும் தரியலரை
அவமானம் செய்யக் கணங்களை ஏவும்அகோரி இங்கு
நலமாக வந்தெனைக் காக்கும் திரிபுர நாயகியே
கருணாசாகரி ஓம் ஸ்ரீ மகா வாராஹி பத்மபாதம் நமோஸ்துதே||
துடியான தெய்வமே வராகி அன்னையே திருவடிகள் சரணம்
(varahi malai lyrics tamil) is given in this article and it is one of the best songs during our prayer or during any auspicious occasions. Let’s get the blessings by reading this song lyrics. You can find this song by using the following terms like பாடல் வரிகள், அம்மன் பாடல்கள், Amman Devotional Songs, Varahi Amman Songs, வராஹி அம்மன் பாடல்கள். You can also save this post ஸ்ரீ வாராஹி மாலை பாடல் வரிகள் or bookmark it. Share it with your friends…